மைசூர் தசரா விழா... வரலாறு, பெருமைகள், சிறப்புகள்...

மைசூரின் தசரா விழா அரசு விழாவாக, மிக பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகக் கொண்டாடப்படும் இந்த விழாவின் பின்னணி என்ன?

நவராத்திரி திருவிழாவும் தசரா பண்டிகையும் இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டாலும் மைசூரில் கொண்டாடப்படுவதைப் போல வேறெங்கும் அவ்வளவு வண்ணமயமாக இருப்பதில்லை. இந்த விழா, நவராத்திரியின் முதல் நாளன்று துவங்கி, விஜயதசமி தினம் வரை நடைபெறுகிறது.

இந்த ஆண்டு தசரா, அக்டோபர் 15ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதிவரை கொண்டாடப்படுகிறது. 26ஆம் தேதி சாமுண்டீஸ்வரி தேவியின் தேர் திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடக்கும் தசரா விழா, 414ஆவது தசரா விழாவாகும்.

மைசூர் தசராவின் வரலாறு

இந்த ஆண்டு தசரா பண்டிகைக்கு மைசூர் நகரம் களைகட்டியிருக்கிறது. அதன் உச்சகட்ட நிகழ்ச்சிகள் விஜயதசமி தினமான செவ்வாய்க்கிழமையன்று, நிகழவிருக்கின்றன. அன்றைய தினம், யானை மீது தங்க அம்பாரி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும்.

இதற்கு முன்பாக அர்ஜுன் என்ற யானை இதனைச் சுமந்துசென்ற நிலையில், இந்த ஆண்டு அபிமன்யு என்ற யானை இதனைச் சுமந்து செல்லவிருக்கிறது.

தசரா பொதுவாக துர்கை அசுரர்களை வென்றதன் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கு இந்தியா முழுவதும் பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. தேவி மகாத்மியத்தில் சும்பன் - நிசும்பன் என்ற அசுரர்கள், இந்திரனையே வென்று அட்டகாசம் செய்கிறார்கள். அவர்களை துர்கா தேவி வதம் செய்கிறார். அதன் வெற்றியைக் குறிக்கும் தினமாகவும் விஜயதசமி சொல்லப்படுவதுண்டு.

இன்னும் ஒரு புராணக் கதையில் மது - கைதபன் என்ற இரு அசுரர்கள் பிரம்மனுக்கே அச்சுறுத்தலாக உருவெடுக்கும்போது அவர்களை தேவி அழிக்கிறாள் என்று கூறுகிறது.

மற்றொரு கதையில், மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்து, மக்களைக் காப்பாற்றுகிறார். மகிஷனை வதம் செய்த சமுண்டீஸ்வரி கதையே மைசூர் நகருக்கு மிக நெருக்கமான கதையாக அமைந்திருக்கிறது.

விஜயநகரப் பேரரசின் காலகட்டத்திலிருந்தே மைசூரில் இருந்த மன்னர்கள் தொடர்ச்சியாக தசரா விழாவை மிக விமரிசையாகக் கொண்டாடிவருகின்றனர். இந்தத் திருவிழா, நாட்டை ஆள்வதற்கான அதிகாரத்தை, கடவுளிடமிருந்து அரசனுக்கு அளிப்பதைக் குறிக்கிறது. மேலும், அரசனுக்கும் கடவுளுக்குமான இணைப்பையும் இந்த விழா குறிக்கிறது.

மன்னர்களின் ஆட்சிக் காலம் முடிவடைந்த பிறகு, இது போன்ற அர்த்தங்கள் இந்த விழாவுக்குக் கிடையாது என்றாலும், இந்தக் கொண்டாட்டத்தையும் பாரம்பரியத்தையும் அடுத்தடுத்து வந்த அரசுகள் தொடர்ந்தன.

விஜயநகரப் பேரரசின் ஒரு பகுதியாக மைசூர் இருந்த காலத்திலிருந்து இந்த விழா கொண்டாடப்படுகிறது. 1420ல் விஜயநகரப் பேரரசிற்கு வந்த நிகோலோ டி கோன்டி என்ற இத்தாலியப் பயணி, மகா நவமி என்ற பெயரில் இந்த விழா கொண்டாடப்படுவதை தனது பயண நூலில் குறிப்பிட்டிருக்கிறார். பெர்ஷியத் தூதர் அப்துல் ரசாக் 1443ல் இந்த விழாவை நேரில் பார்த்ததைக் குறிப்பிடுகிறார்.

மைசூர் தசரா எப்போது தொடங்கியது?

விஜயநகரப் பேரரசால்தான் முதன்முதலில் இந்த விழா கொண்டாடப்பட்டதா என்பதைச் சொல்ல சரியான ஆதாரங்கள் கிடையாது. ஆனால், தசரா மிகப் பெரிய சமூக - மத விழாவாக விஜயநகரப் பேரரசின் காலத்தில்தான் மாறியது.

இந்த காலகட்டங்களில் இந்த விழா எவ்வளவு விமரிசையாக, எப்படி கொண்டாடப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் மைசூர் அரண்மனையின் ஆவணங்களில் காணப்படுகின்றன. 1520ல் இங்குவந்த போர்ச்சுகீசிய குதிரை வியாபாரியான டொமினிகோ பயசும் இது குறித்து விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

அவரது பதிவுகளின்படி, நவராத்திரிக்காக அரண்மனையில் மிகப் பெரிய பந்தல் அமைக்கப்படும். இங்கு ஒவ்வொரு நாளும் காலையில் மன்னர் பூஜையில் ஈடுபடுவார். பிறகு, அணிவகுப்புகள், நடனங்கள் ஆகியவை நடைபெறும்.

பிற்பகலில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் அழைப்பின் பேரில் மட்டுமே ஒருவர் பங்கேற்க முடியும். நடனம், மல்யுத்தம் போன்றவை நடக்கும். பத்தாவது நாள் மிகப் பிரம்மாண்டமான அணிவகுப்பு மரியாதை நடைபெறும்.

இந்தத் திருவிழா என்பது, ஒரு புதிய நிதியாண்டையும் குறித்தது. மன்னரின் கீழ் இருந்த குறுநில மன்னர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய திறையை இந்த காலகட்டத்தில்தான் செலுத்துவார்கள். மன்னருக்கான மரியாதைகளும் செலுத்தப்படும். இவையெல்லாம் பொது மக்களுக்கு மத்தியில் நடக்கும் என்பதால், ஒரு தர்பாரைப் பார்ப்பதுபோல காட்சியளிக்கும்.

ஸ்ரீரங்கப்பட்டணத்தில் 'மைசூர்' தசரா

1565வாக்கில் விஜயநகரப் பேரரசு சிதற ஆரம்பித்தது. அப்போது மைசூர் தனி அரசாக தன்னை பிரகடனம் செய்து கொண்டது. முதல் சுதந்திர அரசராக இரண்டாம் திம்மராஜ உடையார் முடிசூடிக்கொண்டார். அவருக்குப் பிறகு அரசரான, முதலாம் ராஜ உடையார் நாட்டை விரிவுபடுத்திக்கொண்டே சென்றார். தலைநகரம் மைசூரில் இருந்து ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு 1610ல் மாற்றப்பட்டது.

அப்போதிலிருந்து மைசூர் அரச குடும்பத்தினரால் 'தசரா' என்ற பெயரில் இந்த விழா ஸ்ரீரங்கப்பட்டணத்தில் கொண்டாடப்பட ஆரம்பித்தது. இந்த ஆண்டே, தசரா விழாவின் துவக்கமாகக் கருதப்பட்டு தற்போது 414 தசரா விழா கொண்டாடப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

இதற்கு சில காலத்திற்குப் பிறகு தசரா விழா மீண்டும் மைசூருக்குத் திரும்பியது. 1805ல் மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் அரச தர்பாரை மீண்டும் துவங்கினார். இந்த காலகட்டத்தில்தான், தசரா விழா தற்போதைய நவீன வடிவத்தை எடுத்தது.

2013 டிசம்பரில் அப்போதைய மன்னரான ஸ்ரீகந்த உடையார் மரணமடைய, 2014ஆம் ஆண்டு நடந்த தசராவில், அவரது உடைவாளை அரியணையில் வைத்து விழா நடத்தப்பட்டது.

2015ல் புதிய மன்னராக யதுவீர கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் பதவியேற்ற பிறகு, அவர் தசரா நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மைசூர் அரண்மனை சார்ந்து தனிப்பட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

தசரா கொண்டாட்டம் நடக்கும் 10 நாட்களிலும் மைசூர் அரண்மனை லட்சக்கணக்கான விளக்குகளால் ஒளியூட்டப்படும். பல்வேறு கலை, கலாச்சார நிகழ்ச்சிகளை மைசூர் அரண்மனை வளாகத்தில் கர்நாடக அரசு நடத்துகிறது.

பத்தாவது நாளான விஜயதசமியன்று அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைக்கப்பட்ட அம்பாரியில் சாமுண்டீஸ்வரியின் திருவுருவம் வைக்கப்பட்டிருக்கும். அதனை அரச குடும்பத்தினர் வணங்கிய பிறகு அந்த ஊர்வலம் நகரின் பிரதான வீதிகளில் வலம் வரும்.

தசரா தினத்தில் மைசூர் மாளிகைக்கு எதிரேயுள்ள மைதானத்தில் மிகப் பெரிய பொருட்காட்சி நடத்தப்படும். 1880களில் பத்தாவது சாமராஜ உடையார் இந்த வழக்கத்தைத் துவங்கிவைத்தார். இப்போது இதனை மாநில அரசு நடத்துகிறது.